My page - topic 1, topic 2, topic 3 My page - topic 1, topic 2, topic 3

பயன்மிகு வேளாண் தகவல்கள்!

பொருளடக்கம்

  1. பதிப்புரை
  2. ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு மருத்துவம்
  3. கோடையில் கோழிகளைக் காக்கும் வீட்டு மருத்துவம்
  4. ஆட்டுக்கொல்லி நோய்க்கான வீட்டு மருத்துவம்
  5. செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்
  6. வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள்
  7. பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?
  8. கரும்புத் தோகையில் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு
  9. நிறைவான வருமானம் தரும் வாத்துகள்
  10. கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனத்தின் பங்கு
  11. கால்நடைகளுக்குப் பசுந்தீவனத்தைத் தரும் முறை
  12. மழைக்காலத்தில் பசுந்தீவன மேலாண்மை
  13. கால்நடைகளுக்கு உணவாகும் அசோலா
  14. புங்கனூர் குட்டை மாடுகள்
  15. மழைக்காலமும் குடற்புழு நீக்கமும்
  16. கோடையில் எருமைகள் பராமரிப்பு
  17. கோடையில் ஆடுகள் பராமரிப்பு
  18. கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு
  19. கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை
  20. பல்லுயிரிகளைக் காக்கும் உயிர் வேலிகள்
  21. ஆளி விதையின் பயன்கள்
  22. சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை
  23. நாய்களைத் தாக்கும் உண்ணிகள்
  24. கோவைக்காயின் மருத்துவக் குணங்கள்
  25. பாம்புக் கடியிலிருந்து காத்துக் கொள்ளும் முறைகள்
  26. கோழிகளைத் தாக்கும் சிறு மூச்சுக்குழல் நோய்

நூலாசிரியர்

முனைவர் கோ.கலைச்செல்வி

பதிப்புரை

ணவு உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடே தன்னிறைவு மிக்க நாடாகும். இந்த உணவு உற்பத்தி என்பது, கிராமங்களில் வாழும் மக்களின் நிகரற்ற உழைப்பினால் விளைவது.

விவசாயமும், கால்நடை வளர்ப்பும் சிறப்பாக அமைவதற்குத் தேவையான தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் நாடு, உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும். இந்த வேலையைக் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகிறது பச்சை பூமி மாத இதழ்.

வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சூற்றுச்சூழல் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வெளிவரும் பச்சை பூமி இதழில், வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவத்தில் தேர்ந்த வல்லுநர்கள் வழங்கும் தொழில் நுட்பங்களை வெளியிட்டு, வேளாண் பெருமக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

மேலும், இந்தத் தொழில் நுட்பங்களை முறையாகத் தொகுத்து நூல்களாகவும் வெளியிட்டு வருகிறோம்.

இவ்வகையில், பச்சை பூமி சார்பில் 24 நூல்களைச் செம்மைப் பதிப்புகளாக வெளியிட்டுள்ளோம். இப்போது, முனைவர் கோ.கலைச்செல்வி அவர்கள், பச்சை பூமி இதழில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, பயன்மிகு வேளாண் தகவல்கள் என்னும் தலைப்பில் 25 ஆம் நூலாக, விவசாயிகளின் நலன் கருதி வெளியிடுகிறோம்.

இந்நூலைச் சிறப்பாகவும், விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், தயாரித்துக் கொடுத்துள்ள முனைவர் கோ.கலைச்செல்வி அவர்களுக்குப் பச்சை பூமியின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், வாய்ப்புள்ள விவசாயிகள் அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.

நூலாசிரியர்

பயன்மிகு வேளாண் தகவல்கள்!

முனைவர் கோ.கலைச்செல்வி, இலங்கை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.கோவிந்தன் என்பவரின் மகளாவார். தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பையும், 2005 இல், இளங்கலைக் கால்நடைப் படிப்பையும், 2008 இல், கால்நடை முதுகலைப் படிப்பையும் முடித்த இவர், 2012 இல், சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார். இப்போது, சென்னை மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கால்நடை நலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன், 2008-2009 இல், கேரள மாநிலக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உயிர் வேதியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். 2008 இல், இந்திய அளவில் நடத்தப்பட்ட இந்திய விவசாயத் துறை விரிவுரையாளர்கள் தகுதித் தேர்வில் தென்னிந்திய அளவில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 2009 இல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கால்நடை உதவி மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார்.

2015-2016 இல், கால்நடை மூலிகை மருத்துவச் சான்றிதழ் படிப்பையும், 2017-2022 இல், முனைவர் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். தேசிய மற்றும் உலகளவில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு மாநாடுகளில் சமர்ப்பித்துப் பரிசுகளைப் பெற்றுள்ள இவர், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயம், கால்நடை மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியுள்ளார்.

மேலும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைப் பண்ணைகளை அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு இலவசமாக ஆலோசனைகளை வழங்கி வருகிறார். வார விடுமுறை நாட்களில் கால்நடைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்து வருகிறார். மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் கோழி மற்றும் கால்நடைகளைத் தாக்கும் நுண்ணுயிரிகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.