My page - topic 1, topic 2, topic 3 My page - topic 1, topic 2, topic 3

பாரம்பரிய நெல் வகைகளும் அவற்றின் சிறப்புகளும்

பொருளடக்கம்

  • அணிந்துரை
  • முகவுரை
  • பதிப்புரை
  • பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்
  • முக்கியப் பாரம்பரிய இரகங்களின் இயல்புகள்
  • பிற பாரம்பரிய இரகங்களின் சிறப்புகள்
  • காலச்சூழல் மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ற நெல் இரகங்கள்
  • பாரம்பரிய நெல் இரகங்களைப் பாதுகாப்போர்

நூலாசிரியர்கள்

முனைவர் வே.கிருஷ்ணன், முனைவர் அ.அனுராதா, முனைவர் மு.தமிழரசி, முனைவர் த.ஆனந்தன்

பதிப்புரை

லக வாழ்வின் மூல ஆதாரம் உணவு. இந்த உணவை நோக்கியே அனைத்து உயிர்களும் இயங்கி வருகின்றன. உணவு உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஏனைய எல்லாத் துறைகளிலும் சிறப்புடன் விளங்கும். காலச் சூழலுக்கு ஏற்ப, உணவு உற்பத்திக்கான பயிர் வகைகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். தனித் தன்மைமிக்க பயிர் வகைகளைக் கொண்டுள்ள நாடுகளும் உள்ளன.

இவ்வகையில், நீர்வளம், நிலவளம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சிறந்து விளங்கும் இடங்களிலும், வறட்சி, வெள்ளம், சீரற்ற மண் போன்ற இயற்கை வளங்கள் சீரற்று விளங்கும் பகுதிகளிலும், நன்கு வளர்ந்து மகசூலை அள்ளித் தரும் எண்ணற்ற பாரம்பரிய நெல் இரகங்களைக் கொண்டது நமது நாடு.

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப, தம்மை மாற்றிக் கொண்டு, பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதல்களைத் திறம்பட எதிர் கொண்டு விளையும் நமது பாரம்பரிய நெல் இரகங்கள் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. மருந்தாக விளங்கிய அந்த உணவுகள், அறிவியல் வேளாண்மை, நாகரிக வாழ்க்கை போன்றவற்றால் புறந்தள்ளப்பட்டன.

ஆனால், இரசாயன வேளாண்மையால், நீரில், நிலத்தில், காற்றில் உண்டாகி வரும் மாறுதல்கள், எஞ்சிய நஞ்சு கலந்த உணவுகளை உண்பதால் உடல் நலத்தில் நிகழ்ந்து வரும் பக்க விளைவுகள் ஆகியன, மீண்டும் நம் பாரம்பரியப் பயிர்களை நோக்கி நம்மைத் திரும்ப வைத்துள்ளன.

அதனால், அமைதியான பூங்காற்றைப் போல, நமது மரபு சார்ந்த விவசாயமும், பயிர் இரகங்களும் தமிழகம் முழுவதும் பரவி வருகின்றன.

இவற்றை ஊக்கப்படுத்தும் வகையில், முனைவர் வே.கிருஷ்ணன், முனைவர் அ.அனுராதா, முனைவர் மு.தமிழரசி, முனைவர் த.ஆனந்தன் ஆகியோர், பாரம்பரிய நெல் இரகங்களும் அவற்றின் சிறப்புகளும் என்னும் நூலை எழுதியிருப்பது பாராட்டுக்கு உரியது. இந்நூல், பாரம்பரிய நெல் இரகங்களின் ஆய்வு நூலாக விளங்குகிறது. நூலாசிரியர்களின் இந்தப் பெருமுயற்சி, நமது அங்கக விவசாயம் மற்றும் மரபு சார்ந்த நெல் இரகங்களை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றும்.

எனவே, பச்சை பூமி பதிப்பகம் சார்பில் இந்நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இயற்கை நல ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள், நமது வாழ்வியல் தொன்மைப் பற்றாளர்கள் போன்றோர் இந்நூலை வாங்கிப் படித்து, தமிழகம் முழுவதும் பரப்பிட வேண்டுகிறோம்.

– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.

நூலாசிரியர்கள்

பாரம்பரிய நெல் வகைகளும் அவற்றின் சிறப்புகளும்!

முனைவர் வே.கிருஷ்ணன் அவர்கள், புதுச்சேரியில் பிறந்தவர். வேளாண் இளங்கலை, முதுகலைப் படிப்பை, மதுரை வேளாண்மைக் கல்லூரியிலும், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறையில் முனைவர் படிப்பை, கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார். இவர் இப்போது காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரியில், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இத்துறையில் 27 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர் பத்துக்கும் மேற்பட்ட பாட நூல்களை எழுதியுள்ளார். பாரம்பரிய நெல் ஆராய்ச்சி, வல்லுநர் விதை உற்பத்தி மற்றும் வாழைத்திசு வளர்ப்பு உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

பாரம்பரிய நெல் வகைகளும் அவற்றின் சிறப்புகளும்!

முனைவர் அ.அனுராதா அவர்கள், திருவண்ணாமலையில் பிறந்தவர். வேளாண் இளங்கலைப் படிப்பை, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலும், முதுகலைப் படிப்பை மதுரை வேளாண்மைக் கல்லூரியிலும், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் முனைவர் படிப்பை, கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார். இப்போது நாகை மாவட்டம் கீழ்வேலூர் வேளாண்மைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சிறந்த விரிவாக்கப் பணியாளர் விருதையும், விவசாயிகளுக்குச் சிறந்த சேவை ஆற்றியதற்காக, திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு விருதையும், வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் சிறந்த கட்டுரையாளர் விருதையும் பெற்றுள்ளார்.

பாரம்பரிய நெல் வகைகளும் அவற்றின் சிறப்புகளும்!

முனைவர் மு.தமிழரசி அவர்கள் கோவையில் பிறந்தவர். இவர் காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரியில் வேளாண் இளங்கலைப் படிப்பையும், மதுரை வேளாண்மைக் கல்லூரியில் முதுகலைப் படிப்பையும், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், மரபியல் மற்றும் பயிர் இனப்பெருக்கத் துறையில் முனைவர் படிப்பையும் முடித்துள்ளார். இப்போது காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். முதுகலை மற்றும் முனைவர் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக, இந்திய பயிர் இனப்பெருக்கக் கழக மதிப்புச் சான்றிதழையும், முனைவர் படிப்பின் போது சிறந்த ஆய்வுக்கான முனைவர் பி.வீரபத்திரன் விருதையும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் சிறந்த இளம் விஞ்ஞானி விருதையும் பெற்றுள்ளார்.

பாரம்பரிய நெல் வகைகளும் அவற்றின் சிறப்புகளும்!

முனைவர் தி.ஆனந்தன் அவர்கள், அரியலூரில் பிறந்தவர். வேளாண் இளங்கலை படிப்பை, காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரியிலும், முதுகலைப் படிப்பு மற்றும் முனைவர் படிப்பை, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலும் பெற்றுள்ளார். முனைவர் படிப்பின் ஆராய்ச்சிப் பகுதியை, பிலிப்பைன் நாட்டிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் முடித்துள்ளார். இப்போது, காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரியில், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை உதவிப் பேராசிரியராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவர், ஏழு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், இருபதுக்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.