ஒட்டுத் திண்ணை
பொருளடக்கம்
ஊரில் விவசாயம் சரிவர அமையாததால், 2000த்தின் தொடக்கத்தில் சென்னைக்கு வந்தேன். பெரும்பாலும் அப்போது சென்னை வானொலியின் விவசாயப் பிரிவு நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி தான் எனது சென்னை வாசத்துக்குத் துணையாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் மதுரைக்காரரும், நிலவளம் மாத இதழின் உதவி ஆசிரியருமான திரு.ரெங்கராஜ் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அவரின் ஆதரவான நட்பு மற்றுமொரு சிறந்த நட்புக்கு வழி வகுத்துத் தந்தது. அதாவது, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவரும், நிலவளம் மாத இதழின் ஆசிரியருமான திரு.சந்திரசேகரன் அவர்களின் நட்புக் கிடைத்தது.
ஒரு மாலைப்பொழுதில் நிலவளம் அலுவலகத்தில் அறிமுகமாகிப் பேசிக் கொண்டோம். இந்தப் பழக்கம் மழைக்காலப் பயிரைப் போலச் செழிப்பாக வளர்ந்தது. ஒன்றிரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், என் வானொலிப் பணி, என் களப்பணி, என் பாட்டு, என் பேச்சு, என் எழுத்து, என் நோக்கம் வரையில் புரிந்து கொண்ட அவர், நிலவளம் இதழில், விவசாயிகளுக்குப் பயனுள்ள செய்திகளைத் தொடர்ந்து எழுதச் சொன்னார். அந்த வகையில், குப்புசாமி, சுப்புசாமி என்னும் இருவரின் உரையாடலாக ஒட்டுத் திண்ணை என்னும் பகுதியை, 2004 நவம்பரில் இருந்து 2007 மார்ச் வரையில் மாதந்தோறும் எழுதி வந்தேன்.
அதன் நூல் வடிவம் தான் இந்த ஒட்டுத் திண்ணை. இந்தத் திண்ணையில், இந்தச் சமூகத்துக்கு மிக அவசியமான, விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தகவல்களை, குப்புசாமி, சுப்புசாமியின் சுவையான பேச்சுடன் கலந்து கொடுத்து வந்தேன். இது எல்லோருக்கும் விருப்பமான பகுதியாக அமைந்திருந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் கட்டப்பட்ட வீடுகள் முகப்புத் திண்ணையுடன் அமைந்திருக்கும். குடிசை வீடுகளில் கூட இந்தத் திண்ணை இருக்கும். அதற்குப் பிறகு திண்ணையுடன் வீட்டைக் கட்டும் வழக்கம் மாறிப் போனது. இந்தத் திண்ணை அண்டை வீட்டினருடன் கூடிப்பேசும் இடமாக, வழிப்போக்கர்கள் சற்று ஓய்வெடுக்கும் இடமாக, நீதி பேசும் இடமாக இருந்து வந்தது. இது, நமது வாழ்வியல் முறைகளில் ஒன்று. எதிர்வரும் தலைமுறையினர் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான், ஒட்டுத் திண்ணை எனத் தலைப்பிட்டோம். இந்தத் திண்ணையில் குப்புசாமியும் சுப்புசாமியும் பேசுவதைக் கேளுங்கள். நன்றி!
நூலாசிரியர்
பசுமை க.முருகேசன்
நூலாசிரியர் குறிப்பு

பசுமை க.முருகேசன். இவர் பிறந்த ஊர் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் உள்ள எழுமலை வங்கிநாராயணபுரம். கடும் உழைப்பாளி. முயற்சி, உண்மை, உழைப்பு ஆகிய இந்த மூன்றும் வெற்றியைத் தரும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளவர். நல்ல தமிழில் இயல்பாகப் பேசுவார்; மண்வாசம் மணக்க இனிமையாகப் பாடுவார். இவரின் எழுத்தில் கவிமொழியும், புதுமொழியும் வைரத்தைப் போல ஊடோடிக் கிடக்கும்.
பசுமை விரும்பி. நாற்பது வயது வரையில் ஊரில் முழுநேர விவசாயி. அதற்குப் பிறகு, இரண்டாயிரத்தில் இருந்து இன்று வரையில் சென்னை வாசம். 2011 வரையில் முன்னணி நாளிதழ், மாத இதழ்களில் வேலை. இதற்கிடையில் 1991 முதல் 1999 வரையில் மதுரை வானொலியிலும், 2000 முதல் 2008 வரையில், சென்னை வானொலியிலும், விவசாயப் பிரிவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி.
இந்த அனுபவங்களின் அடிப்படையில், 2011 இல் பச்சை பூமி என்னும் மாத இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இயங்கி வருகிறார். மேலும், 2004 இல் பசுமை அறக்கட்டளை என்னும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கி, அதன் மேலாண்மை அறங்காவலராகவும் இயங்கி வருகிறார்.
வேளாண்மை, சுற்றுச்சூழல், கால்நடை வளர்ப்பு உத்திகள் அடங்கிய தரமான நூல்களைப் பச்சை பூமி சார்பில் பதிப்பித்து வெளியிட்டு வருகிறார். இருக்கும் வரையில் இந்தப் புவியின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும் என்பதும், எல்லோரும் தமிழைப் பிழையின்றி எழுத வேண்டும் என்பதும் இவரின் விருப்பம்.
– ஐ.விஜயன் இ.த.ப., துணை இயக்குநர், செய்திப் பிரிவு, பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை.


