தோட்டக்கலை சாகுபடி உத்திகள்!
பொருளடக்கம்
- பதிப்புரை
- சம்பங்கி மலர் சாகுபடி
- செண்டுமல்லி சாகுபடி
- குண்டுமல்லி சாகுபடி
- ரோஜா சாகுபடி
- அரளிப்பூ சாகுபடி
- சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி
- கனகாம்பரம் சாகுபடி
- முருங்கை சாகுபடி
- கறிவேப்பிலை சாகுபடி
- மரவள்ளிக் கிழங்கு சாகுபடி
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி
- சௌசௌ சாகுபடி
- விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி
- கத்தரி சாகுபடி
- துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி
- துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி
- முருங்கை இலை சாகுபடி
- மிளகு சாகுபடி
- மஞ்சள் சாகுபடி
- இலை வாழை சாகுபடி
- முந்திரி சாகுபடி
- உயர் விளைச்சல் முந்திரி இரகங்கள்
- பெரியகுளம் – 2 கொடுக்காய்ப்புளி சாகுபடி
- எண்ணெய்ப் பனை சாகுபடி
- இலவங்கப்பட்டை மரம் சாகுபடி
- வீட்டுத் தோட்டம் அமைத்தல்
- மாடித்தோட்டம் அமைத்தல்
- பால் காளான் வளர்ப்பு
- காய்கறி நாற்றங்கால் மேலாண்மை
- குழித்தட்டுகளில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி
- காய்கறிகளும் அறுவடைக் காலமும்
- காய்கறிப் பயிர்களுக்கான உர அளவுகள்
- குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்
- காய்கறிப் பயிர்களில் மூடாக்கு
- தரமான எலுமிச்சை நாற்றுத் தயாரிப்பு
- தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்
- தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் அன்னாசி
- தென்னந் தோப்புக்கு ஏற்ற ஊடுபயிர் கோகோ
- நீரைச் சிக்கனப்படுத்தும் சொட்டுநீர்ப் பாசனம்
நூலாசிரியர்கள்
முனைவர் சு.சுகன்யா, முனைவர் கா.பரமேஸ்வரி, முனைவர் ச.வள்ளல் கண்ணன், முனைவர் வே.விஜயகீதா, முனைவர் மு.சண்முகநாதன், வி.வ.சங்கீதா ஜெபலின்
பதிப்புரை
நொடிக்கு நொடி பெருகிக் கொண்டிருக்கிறது மக்கள் தொகை. பெருகி வரும் இந்த மக்களின் பசியைப் போக்க வேண்டுமெனில், விவசாயமும் நாளுக்கு நாள் வளர்ச்சியடைய வேண்டும். எனவே, உணவு உற்பத்தியைப் பெருக்கவும், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், புதிய புதிய பயிர் இரகங்கள் வந்து கொண்டே உள்ளன.
இந்த இரகங்களைப் பயிரிடும் போது, அவற்றின் விளைச்சலுக்கு ஏற்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல், விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்திக்க நேரிடும். இந்நிலையைத் தவிர்க்க, சரியான தொழில் நுட்பங்களை விவசாயப் பெருமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த வேலையை ஒருமுறையல்ல, பலமுறை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்தப் பணியில், 2011-ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் விவசாய மாத இதழான பச்சை பூமி, தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது, மேலும், பச்சை பூமி சார்பில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புச் சார்ந்த உத்திகளைக் கொண்ட நூல்களும் வெளியிடப்படுகின்றன. இவ்வகையில், தோட்டக்கலை சாகுபடி உத்திகள் என்னும் இந்நூல், பச்சை பூமியின் முப்பதாம் நூலாகும்.
காய்கறிகள், பழவகைகள், மலர்ப் பயிர்கள், மரப்பயிர்கள் போன்றவற்றில் அதிக மகசூலைப் பெறுவதற்கான அறிவியல் சார்ந்த உத்திகள், இந்நூலில் சிறப்பாகக் கூறப்பட்டு உள்ளன. மேலும், ஊடுபயிர் சாகுபடி முறைகள் போன்ற பல்வேறு உத்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
விவசாயிகள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில், தொழில் நுட்பங்களைச் சிறப்பாக வழங்கியுள்ள முனைவர் சு.சுகன்யா, முனைவர் கா.பரமேஸ்வரி, முனைவர் ச.வள்ளல் கண்ணன், முனைவர் வே.விஜயகீதா, முனைவர் மு.சண்முகநாதன், வி.வ.சங்கீதா ஜெபலின் ஆகியோருக்குப் பச்சை பூமியின் சார்பில், நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், விவசாயிகள் அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.
– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.
நூலாசிரியர்கள்

கள்ளக்குறிச்சியில் பிறந்த முனைவர் சு.சுகன்யா அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியையும், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இப்போது, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் வேதியியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

புதுச்சேரி ஒன்றியம், மண்ணாடிப்பட்டில் பிறந்த முனைவர் கா.பரமேஸ்வரி அவர்கள், விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியையும், விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இப்போது, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பட்டு வளர்ப்பியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

மதுரை மாவட்டம், ம.கல்லுப்பட்டியில் பிறந்த முனைவர் ச.வள்ளல் கண்ணன் அவர்கள், ம.கல்லுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியையும், உழவியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இப்போது, இராமநாதபுரம் மாவட்டம், குயவன் குடியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், ஒதிக்காடு கிராமத்தில் பிறந்த முனைவர் வே.விஜயகீதா அவர்கள், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியையும், விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இப்போது, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

புதுக்கோட்டையில் பிறந்த முனைவர் மு.சண்முகநாதன் அவர்கள், மதுரை செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியையும், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இப்போது, புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

மதுரை மாவட்டம், ம.கல்லுப்பட்டியில் பிறந்த வி.வ.சங்கீதா ஜெபலின் அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கமலா நிகேதன் மாண்டசோரி பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். இப்போது, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், முதுகலை வேளாண் அறிவியல் மாணவியாக இருந்து வருகிறார்.


