அலங்கார மீன் வளர்ப்பு!
பொருளடக்கம்
- பதிப்புரை
- அலங்கார மீன் தொட்டி அமைப்பு
- அலங்கார மீன்களின் உயிருணவுகள்
- அலங்கார மீன் தொட்டிக்குத் தேவையான காற்றுப் புகுத்திகள்
- நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள்
- வாஸ்து மீன்
- டிஸ்கஸ் மீன்
- சிச்லிட் மீன்
- சீயாமீஸ் போராளி மீன்
- ரெயின்போ ஷார்க் மீன்
- கப்பி மீன்
- பிளாட்டி மீன்
- வாள்வால் மீன்
- கோய் மீன்
- கோய்க் கெண்டை விதை மீன்
- தேவதை மீன்
- பொன்மீன்
- செர்ரிபார்ப் மீன்
- நியான் டெட்ரா மீன்
நூலாசிரியர்கள்
முனைவர் சா.ஆனந்த், முனைவர் ச.சுதர்சன், ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ் சபரி
பதிப்புரை
அழகு மீன் வளர்ப்பு என்பது, ஆடம்பரம், வசதியுள்ளோர் செய்வது என்னும் நிலையில் இருந்து, மக்களின் மன மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதாகக் கருதப்படுவதால் இது அவசியம், எல்லோரும் மேற்கொள்ளலாம் என்னும் நிலைக்கு வந்துள்ளது. அவரவர் வசதிக்கு ஏற்ப அழகு மீன்களை வளர்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில நூறு ரூபாயில் இருந்து பல இலட்சம் டாலர்கள் வரையென, அழகு மீன்களின் விலை நிலவரம் உள்ளது.
மேலும், உலகளவில் அழகு மீன்கள் வளர்ப்பைப் பெரும்பாலான மக்கள் விரும்புவதால், அழகு மீன் வணிகம் தனிப்பெரும் தொழிலாக மாறியுள்ளது. எண்ணற்ற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அழகு மீன் வணிகத்தில், ஒவ்வோர் ஆண்டும் பல கோடி ரூபாய்கள் புழங்குகின்றன.
எனவே, அழகு மீன்களைப் பற்றியும், அவற்றின் வளர்ப்பு முறைகளைப் பற்றியும், பச்சை பூமி மாத இதழில் தொடர்ந்து சொல்லி வந்தோம். இவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டால், அழகு மீன் வளர்ப்பில் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்னும் எண்ணத்தில், அலங்கார மீன்கள் என்னும் தலைப்பில் வெளியிடுகிறோம்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் முனைவர் சா.ஆனந்த், நாகை மாவட்டம், தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர். மீனவளக் கல்லூரியில் முதுநிலை ஆய்வாளராக இருக்கும் முனைவர் ச.சுதர்சன், பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய முதுநிலைக் கல்வி மாணவர் ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ் சபரி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அவர்களுக்குப் பச்சை பூமியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பச்சை பூமி வெளியிட்டு வரும் வாழ்வியல் பயனுள்ள நூல்கள் வரிசையில், இந்த நூல் பச்சை பூமியின் பன்னிரண்டாம் வெளியீடாகும். இந்த நூலை வாய்ப்புள்ள அனைவரும் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.
– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.
நூலாசிரியர்கள்

முனைவர் சா.ஆனந்த் அவர்கள் பிறந்த ஊர் ஈரோடு. பெற்றோர் திரு. கோ.சாம்ராஜ், திருமதி சா.ருக்மணி. சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்ற இவர், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உயர் கல்வியை முடித்து விட்டு, மீன்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இப்போது, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், ஈரோடு பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நவீன மீன் வளர்ப்பு உத்திகளை, மீன் வளர்ப்போரிடம் கொண்டு சேர்க்கும் ஆர்வத்துடன் தொடர்ந்து எழுதியும், பயிற்சிகளை வழங்கியும் வருகிறார்.

முனைவர் ச.சுதர்சன் அவர்கள் பிறந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசப்பக் கவுண்டன் பூதூர். பெற்றோர் திரு. ந.தி.சண்முகம், திருமதி ச.பத்மாவதி. தாசப்பக் கவுண்டன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரியில் இளங்கலை மீன்வளப் படிப்பையும், மும்பையில் உள்ள மத்திய மீன்வளக் கல்வி நிலையத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்து விட்டு, முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இப்போது, நாகை மாவட்டம், தலைஞாயிறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும், மீன் வளர்ப்பு உத்திகளைக் களத்தில் கொண்டு சேர்க்கும் விதமாகத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ் சபரி அவர்கள் பிறந்த ஊர் திண்டுக்கல். பெற்றோர் திரு.ம.ஸ்ரீதரன், திருமதி ஸ்ரீ.இராமலட்சுமி. திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வியைப் பயின்றுள்ளார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன்வளத்தில் இளநிலைப் பட்டப் படிப்பை முடித்து விட்டு, இப்போது, ஈரோடு பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், முதுநிலைப் படிப்பைப் படித்து வருகிறார். மேலும், மீன்வள உத்திகளைப் பரப்பும் விதத்தில் எழுதி வருகிறார்.


