My page - topic 1, topic 2, topic 3 My page - topic 1, topic 2, topic 3

தேனீ வளர்ப்பு!

பொருளடக்கம்

  • பதிப்புரை
  • தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம்
  • தேனீக்களின் வகைகள்
  • தேனீக் குடும்பம்
  • தேனீக்களின் பணிப் பங்கீடு
  • தேனீ வளர்ப்பு முறை
  • தேனீ வளர்ப்பு உபகரணங்கள்
  • தேனீ மேய்க்கால்
  • தேனீக்களின் மொழி
  • தேனீக்களின் குணங்கள்
  • தேனீக் கூட்டங்களைப் பராமரித்தல்
  • தேனீக்களின் எதிரிகள்
  • தேனீக்களும் பயிர்ப் பாதுகாப்பு முறைகளும்
  • தேனீக்களும் பயிர் மகசூலும்
  • தேனைச் சேகரித்தல், பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்
  • தேனீக்கள் தரும் பொருள்கள்
  • தேனீ வளர்ப்பில் செலவு – வரவு விவரம்
  • தேனீ வளர்ப்போருக்கான தகவல்கள்
  • நோக்கீடுகள்
  • தேனீக்களின் வேண்டுகோள்

நூலாசிரியர்கள்

முனைவர் ஜே.இராஜாங்கம், முனைவர் சே.சரஸ்வதி, முனைவர் செ.சுகன்யா கண்ணா, முனைவர் சு.முத்துராமலிங்கம், முனைவர் மு.உமா மகேஸ்வரி

பதிப்புரை

ப்பாவுக்கு ஒட்டுமொத்தக் குடும்பப் பொறுப்பு. அம்மாவுக்கு வீட்டுப் பொறுப்பு. ஒரு பிள்ளை ஏரோட்டுவார். ஒரு பிள்ளை நீர்க் கட்டுவார். இரு மகள்கள் வேலையாட்கள் துணையுடன் நாற்று நடுவர், களையெடுப்பர், கதிரறுப்பர். தாத்தாவும் பாட்டியும் களத்தில் இருந்து ஆலோசனை வழங்குவர். தேனீக்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போதும், கேட்கும் போதும்; ஆளுக்கொரு வேலையைத் திட்டமிட்டுச் செய்து சுகமாக வாழ்ந்து போன, நமது பாரம்பரியக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை தான் என் நினைவுக்கு வரும்.

சரியான திட்டமிடலும், அதை நோக்கிய உழைப்பும் இருந்தால், வெற்றி மட்டுமே நம்முன் நிற்கும் என்பதற்குத் தேனீக்கள் தக்க சான்றாகும். தேனீக்களின் வாழ்க்கை முறையைச் சரியான அரசு நிர்வாகத்தின் ஒப்பீடாகக் கூடச் சொல்லலாம். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பண்புள்ளவை தேனீக்கள்; வாழ்வித்து வாழும் வள்ளல்கள். ஆறறிவு ஜீவன்களுக்கு உணவளிப்பதில் மற்றும் பாடம் புகட்டுவதில், இந்த ஓரறிவு ஜீவன்களின் பங்கு மதிப்பிடற்கரியது.

மக்களின் வாழ்க்கைக்கு உதவும் உயிரினங்களில் தேனீக்களுக்கு முக்கிய இடமுண்டு. இன்றைய நவீன வேளாண்மையில் பயன்படும் வேதிப் பொருள்கள், தேனீக்களின் அழிவுக்குக் காரணமாக விளங்குகின்றன.

தேனீக்கள் அழியுமானால், நாம் உணவுக்கு அல்லாடும் நிலை, தள்ளாடும் நிலை ஏற்படும். எனவே, நமது உணவு உற்பத்தியைக் கருத்தில் கொண்டேனும் தேனீக்களை நாம் பாதுகாத்தாக வேண்டும்.

காடுகளில், வயல் வெளிகளில் தம் போக்கில் வாழ்ந்து திரியும் தேனீக்களை, கூட்டுக்குள் வைத்து, வருவாய் ஈட்டும் தொழிலாகச் செய்யும் நடைமுறை உலகெங்கும் பரவியுள்ளது.

தேனீக்களின் உழைப்பில் கிடைக்கும் தேன், தேன் மெழுகு, தேன் பிசின், அரசகூழ், மகரந்தம் உள்ளிட்ட ஒவ்வொரு பொருளும் மதிப்பு மிக்கதாக உள்ளது. தேனீக்களின் விஷம் கூட மருந்தாக விளங்குகிறது. ஆக, தேனீ வளர்ப்பு, மனித சமூகத்தை வாழ வைக்கும் தொழிலாக மாறியுள்ளது.

ஒரு தொழிலை முறையாக, செம்மையாகச் செய்தால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் பயனை அடைய முடியும். இந்த நோக்கில், தேனீ வளர்ப்புக் குறித்த அனைத்துத் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. முனைவர் ஜே.இராஜாங்கம், முனைவர் செ.சுகன்யா கண்ணா, முனைவர் சே.சரஸ்வதி, முனைவர் சு.முத்துராமலிங்கம், முனைவர் மு.உமா மகேஸ்வரி ஆகியோர், இந்நூலைத் திறம்பட எழுதியுள்ளனர். இவர்களுக்குப் பச்சை பூமியின் வாழ்த்துகள்.

இந்நூல், தேனீ வளர்ப்பில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நூல் மட்டுமல்ல. தேனீக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் ஏற்படுத்தும் விழிப்புணர்வு நூலுமாகும்; அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க ஏற்ற பொது அறிவு நூலுமாகும். இந்நூலைப் பச்சை பூமியின் செம்மைப் பதிப்பாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். அனைவரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.

நூலாசிரியர்கள்

தேனீ வளர்ப்பு!

முனைவர் ஜே.இராஜாங்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையராகப் பணியாற்றி வருகிறார். கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் நிர்வாகத் துறையில் சுமார் 28 ஆண்டு அனுபவமிக்கவர். பழ அறிவியல் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு 7 புதிய பழ இரகங்கள் மற்றும் 17 தொழில் நுட்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், 22 நூல்கள் மற்றும் 70 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பதின்மூன்று விருதுகளையும் பெற்றுள்ளார்.

தேனீ வளர்ப்பு!

முனைவர் சே.சரஸ்வதி, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பழவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவராகப் பணியாற்றி வருகிறார். பழப்பயிர்கள் ஆராய்ச்சியில் 27.5 ஆண்டுகள் அனுபவமிக்கவர். 12 விருதுகளைப் பெற்றுள்ளார். இவர், 4 பழ இரகங்கள் மற்றும் 2 தொழில் நுட்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், 12 நூல்கள், 112 ஆய்வுக் கட்டுரைகள், 50 பிரபலக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தேனீ வளர்ப்பு!

முனைவர் செ.சுகன்யா கண்ணா, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பூச்சியியல் துறையில், உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், மக்காச்சோளம், எண்ணெய் வித்துகள், கரையான்கள் மற்றும் பழப்பயிர் பூச்சி நிர்வாகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு, 5 நூல்கள், 10 ஆய்வுக் கட்டுரைகள், 25 தொழில் நுட்பக் கையேடுகளை வெளியிட்டுள்ளார்.

தேனீ வளர்ப்பு!

முனைவர் சு.முத்துராமலிங்கம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வி.சி.எஸ். மற்றும் ஆர்.எஃப். திட்டத்தில், இணை முதன்மை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். காபி வாரியத்தில் அராபிக்கா காபி இரகத்தில் ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்திய அரசின் தேசிய தோட்டக்கலை வாரியம் மற்றும் மிஷன் திட்டத்தில் பொறுப்பாளராக இருந்துள்ளார். மேலும் இவர், 5 நூல்கள் 17 ஆய்வுக் கட்டுரைகள், 30 துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளார்.

தேனீ வளர்ப்பு!

முனைவர் மு.உமா மகேஸ்வரி, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், இயற்கைவள மேலாண்மைத் துறையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், பயிர் மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மையில் ஆய்வுகளை மேற்கொண்டு 2 நூல்கள், 9 ஆய்வுக் கட்டுரைகள், 2 தொழில் நுட்பக் கையேடுகளை வெளியிட்டுள்ளார்.