சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் | தொகுதி – 4 | இயற்கை விவசாய இடுபொருள்கள்
பொருளடக்கம்
- பதிப்புரை
- பஞ்சகவ்யா
- தசகவ்யா
- மீன் அமிலம்
- அமுதக் கரைசல்
- தேமோர்க் கரைசல்
- அரப்பு மோர்க் கரைசல்
- தொல்லுயிரிக் கரைசல்
- பூச்சி விரட்டி
- காய்ப்புழு விரட்டி
- இலைப்பேன் விரட்டி
- இலை, தண்டுத் துளைப்பான் விரட்டி
- நோய் விரட்டி
- நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டி
- ஒட்டுண்ணிகள்
- பயிர்கள் காப்பில் பொறிகள்
- இ.எம்.கரைசல்
- வேம்பு சார்ந்த இடுபொருள்கள்
- பல பயிர்கள் சாகுபடி
- ஊடு பயிர்கள்
- உயிர் உரங்கள்
- மண்புழு உரம்
- பசுந்தாள் உரப்பயிர்கள்
- இன்னும் பல தகவல்கள்
நூலாசிரியர்
பசுமை க.முருகேசன்
பதிப்புரை
மண்ணும் மன்னுயிரும் வாழும் வகை செய்வோம் என்னும் இலக்கில், இயற்கை வேளாண்மை மற்றும் சூழல் மேலாண்மையை வலியுறுத்தி, பச்சை பூமி என்னும் மாத இதழை 2011 ஆம் ஆண்டில் இருந்து வெளியிட்டு வருகிறோம். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மரம் வளர்ப்பு, மழைநீர்ச் சேமிப்பு, நிலத்தடி நீர்ப் பாதுகாப்புப் போன்ற, மக்கள் மற்றும் மண்வளம் காக்கும் செய்திகளை இந்த இதழில் வெளியிடுகிறோம்.
இதுமட்டுமின்றி, மக்களுக்குப் பயனுள்ள செய்திகளைக் கொண்ட நூல்களையும் வெளியிடுவது எங்களின் நோக்கமாகும். இந்த வகையில், சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் வரிசையில் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளோம். அந்த வரிசையில், விவசாயம் சிறக்க உதவும் இடுபொருள்கள் அடங்கிய இந்நூல் நான்காம் நூலாகும்.
இயற்கை விவசாயத்துக்கு உதவும், பஞ்சகவ்யா, தசகவ்யா, மீன் அமிலம், அமுதக் கரைசல், தேமோர்க் கரைசல், அரப்பு மோர்க் கரைசல், தொல்லுயிரிக் கரைசல், பூச்சி விரட்டி, காய்ப்புழு விரட்டி, இலைப்பேன் விரட்டி, இலைத் துளைப்பான் விரட்டி, நோய் விரட்டி ஆகியவற்றைத் தயாரித்துப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி, இந்நூல் தெளிவாக விளக்குகிறது.
மேலும், பல பயிர்கள் சாகுபடி, ஒட்டுண்ணிகள், இனக்கவர்ச்சிப்பொறி, விளக்குப்பொறி, ஒட்டுப்பொறி, ஊடுபயிர்கள், உயிர் உரங்கள் போன்ற, இயற்கை விவசாயம் பெருக உதவும் செய்திகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இது விவசாயிகளுக்கு மிகமிக உதவியாக இருக்கும்.
இந்நூலை, பதிப்பாசிரியராகிய நான் எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் எழுதியும், பிற வல்லுநர்களின் செய்திகளைத் தொகுத்தும் இந்நூலில் கூறியுள்ளேன். இது அனைத்து விவசாயிகளிடமும் இருக்க வேண்டிய நூல். வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.
– பசுமை க.முருகேசன், பதிப்பாசிரியர்.
நூலாசிரியர்

பசுமை க.முருகேசன். இவர் பிறந்த ஊர் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் உள்ள எழுமலை வங்கிநாராயணபுரம். கடும் உழைப்பாளி. முயற்சி, உண்மை, உழைப்பு ஆகிய இந்த மூன்றும் வெற்றியைத் தரும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளவர். நல்ல தமிழில் இயல்பாகப் பேசுவார்; மண்வாசம் மணக்க இனிமையாகப் பாடுவார். இவரின் எழுத்தில் கவிமொழியும், புதுமொழியும் வைரத்தைப் போல ஊடோடிக் கிடக்கும்.
பசுமை விரும்பி. நாற்பது வயது வரையில் ஊரில் முழுநேர விவசாயி. அதற்குப் பிறகு, இரண்டாயிரத்தில் இருந்து இன்று வரையில் சென்னை வாசம். 2011 வரையில் முன்னணி நாளிதழ், மாத இதழ்களில் வேலை. இதற்கிடையில் 1991 முதல் 1999 வரையில் மதுரை வானொலியிலும், 2000 முதல் 2008 வரையில், சென்னை வானொலியிலும், விவசாயப் பிரிவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி.
இந்த அனுபவங்களின் அடிப்படையில், 2011 இல் பச்சை பூமி என்னும் மாத இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இயங்கி வருகிறார். மேலும், 2004 இல் பசுமை அறக்கட்டளை என்னும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கி, அதன் மேலாண்மை அறங்காவலராகவும் இயங்கி வருகிறார். வேளாண்மை, சுற்றுச்சூழல், கால்நடை வளர்ப்பு உத்திகள் அடங்கிய தரமான நூல்களைப் பச்சை பூமி சார்பில் பதிப்பித்து வெளியிட்டு வருகிறார். இருக்கும் வரையில் இந்தப் புவியின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும் என்பதும், எல்லோரும் தமிழைப் பிழையின்றி எழுத வேண்டும் என்பதும் இவரின் விருப்பம்.
ஐ.விஜயன் இ.த.ப, துணை இயக்குநர், செய்திப் பிரிவு, பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை.


